ஊஞ்சக்கல் மலைப்பகுதியில் காட்டு தீ பரவி இருப்பதை காணலாம்.
சதுரகிரி அருகே மலை பகுதியில் பரவும் காட்டு தீ: 2-வது நாளாக அணைக்கும் பணி தீவிரம்
- காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக மரங்களுக்கு இடையே பரவியது.
- சதுரகிரி கோவில் உள்ள பகுதியில் காட்டு தீயால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி பகுதியில் கடந்த மாதம் 17-ந்தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல ஹெக்டேர் பரப்பளவில் இருந்த மரங்கள் எரிந்து நாசமாயின. வனத்துறை காவலர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
இந்த நிலையில் சதுரகிரி மலையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊஞ்சக்கல் மலையில் உள்ள பாப்ப நத்தம் கோவில் பகுதியில் நேற்று திடீரென காட்டு தீ பரவியது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக மரங்களுக்கு இடையே பரவியது. இதனால் அந்தப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரேஞ்சர் செல்லமணி, பிரபாகரன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த குழுவினர் 2 பிரிவுகளாக பிரிந்து 2-வது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
சதுரகிரி கோவில் உள்ள பகுதியில் இந்த காட்டு தீயால் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே ஆடி பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நாளை முதல் 4 நாட்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.