தமிழ்நாடு

தமிழகத்தில் முதல்முறையாக 3 பெண்கள் அர்ச்சகர் ஆனார்கள்- ஸ்ரீரங்கம் கோவிலில் உதவி அர்ச்சகர்களாக பயிற்சி

Published On 2023-09-14 10:06 GMT   |   Update On 2023-09-14 10:06 GMT
  • 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ் வழங்கினார்.
  • 6 மாத வகுப்பு முடிந்ததும் பஞ்சராத்ர ஆகமத்தின் கீழ் மன்னார்குடி ஜீயரிடம் தீட்சை பெற்றுள்ளார்கள்.

சென்னை:

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய இடங்களில் தலா ஒரு பயிற்சி பள்ளி நடத்தப்படுகிறது.

இந்த பள்ளிகளில் சேருபவர்களுக்கு ஒரு ஆண்டு ஆகமம், பூஜை உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு 94 பேர் பயிற்சியில் சேர்ந்தனர். அவர்களில் 3 பேர் பெண்கள்.

முதுகலை பட்டதாரியான ரம்யா, இளங்கலை கணிதவியல் பட்டதாரியான கிருஷ்ணவேணி, இளங்கலை பட்டதாரியான ரஞ்சிதா. இவர்கள் 3 பேரும் ஒரு வருடம் பயிற்சி முடித்து உள்ளார்கள். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ் வழங்கினார்.

கோவில்களில் பாகுபாடு இருக்கக்கூடாது. ஆண்-பெண் பேதம் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த திட்டத்தில் ஆர்வப்படும் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவதாக அறநிலையத்துறை கூறுகிறது. தற்போது பயிற்சி பெற்றுள்ள 3 பெண்களும் 6 மாத வகுப்பு முடிந்ததும் பஞ்சராத்ர ஆகமத்தின் கீழ் மன்னார்குடி ஜீயரிடம் தீட்சை பெற்றுள்ளார்கள்.

பயிற்சி முடித்துள்ள 3 பேரும் ஸ்ரீரங்கம் கோவிலில் உதவி அர்ச்சகர்களாக பயிற்சி பெறுவார்கள். அதன்பிறகு தேவைப்படும் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.

Tags:    

Similar News