2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை படத்தில் காணலாம்.
ஊத்துக்கோட்டை அருகே 2-வது நாளாக நீடிப்பு- வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் போராட்டம்
- பெரம்பூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் நிலஅளவீடு பணிகளை நிறுத்தினர்.
- ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகள் சென்னை பெருநகர எல்லைக்குள் வந்து விட்டதால் உடனே வீட்டு மனை பட்டா வழங்க முடியாது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா கிடையாது.
இவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 30 வருடங்களாக கோரிக்கை மனு அளித்தனர்.
இதற்கிடையே வருவாய்த்துறை அதிகாரிகள் லட்சிவாக்கம் அருகே உள்ள பெரம்பூரில் உள்ள தோப்பு புறம்போக்கு நிலத்தில் வீட்டு மனை பட்டா வழங்க அளவீடு பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பெரம்பூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் நிலஅளவீடு பணிகளை நிறுத்தினர். இதனால் வீட்டுமனை பட்டா வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டுமனை பட்டாவை உடனடியாக வழங்க கோரி லட்சிவாக்கத்தை சேர்ந்த பழங்குடியினர் பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும குடும்பத்துடன் அங்குள்ள திறந்தவெளி இடத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஜீவா தலைமை தாங்கினார்.
இரவும் அவர்களது போராட்டம் நீடித்தது. இதையடுத்து சப்-கலெக்டர் மகாபாரதி, ஊத்துக்கோட்டை தாசில்தார் அருண்குமார், துணை போலீஸ் கண்காணிப்பாளர் சாரதி, இன்ஸ்பெக்டர் ஏழுமலை நேற்று இரவு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகள் சென்னை பெருநகர எல்லைக்குள் வந்து விட்டதால் உடனே வீட்டு மனை பட்டா வழங்க முடியாது.
குடிசை மாற்று வாரியத்தை சேர்ந்த இடங்களை கண்டறிந்து வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதிமொழி அளித்தனர்.
ஆனால் இதை ஏற்காமல் அவர்கள் வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறி போராட்டத்ததை தொடர்ந்தனர். விடிய, விடிய அவர்களது போராட்டம் நீடிதத்தது. கடும் குளிரிலும் அவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு படுத்து தூங்கினர்.
இன்று காலையும் அவர்களது போராட்டம் 2-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. அவர்களிடம் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்தை நடத்த முடிவு செய்து உள்ளனர்.
கடந்த மாதம் 26-ந் தேதியும் இதேபோல் கிராமமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு திறந்த வெளியில் சமைத்து சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊத்துக்கோட்டை தாசில்தார் அருண்குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, விரைவில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.