தமிழ்நாடு

அரிசி கொம்பனை பிடிக்க வரவழைக்கப்பட்ட 3 கும்கிகளுக்கு தினமும் ரூ.20 ஆயிரத்துக்கு உணவு

Published On 2023-06-06 07:58 GMT   |   Update On 2023-06-06 07:58 GMT
  • கம்பம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் யானைகளுக்கான உணவு வழங்கும் பணி நடைபெற்றது.
  • 3 யானைகளுக்கும் தினமும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் கடந்த மாதம் 27-ந்தேதி புகுந்த அரிசி கொம்பனை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டும் முடியாததால் ஊட்டி முதுமலை வனப்பகுதியில் இருந்து உதயன், சுயம்பு, அரிசி ராஜா ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த யானைகள் கடந்த 1 வாரமாக கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

நேற்று அதிகாலை அரிசி கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தியதும் அதனை லாரியில் ஏற்ற கும்கிகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது அரிசி கொம்பன் யானை பிடிபட்டதால் 3 கும்கிகளை சொந்த ஊருக்கு அனுப்ப வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.

உதயன் என்ற கும்கி நேற்று இரவு முதுமலை வனக்காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று அரிசி ராஜா மற்றும் சுயம்பு ஆகிய 2 கும்கிகள் தெப்பக்காடு செல்கின்றன.

இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், அரிசி கொம்பனை பிடிக்க வனத்துறையினர், மருத்துவக்குழுவினர் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில் அதனை அனுப்ப கும்கிகள் பெரிதும் உதவியாக இருந்தன.

இந்த 3 யானைகளுக்கும் தினமும் காலையில் சீமைப்புல் உணவாக வழங்கப்படும். அதன் பின் கேப்பை, அரிசி கலந்த மாவு, கவளமாக வழங்கப்படும். அதன் பின் கரும்பு, வாழைப்பழம், பலாப்பழம் போன்றவை வழங்கப்படும்.

மாலையில் சத்துமாவு கொண்ட கவளம் வழங்கப்பட்டது. கம்பம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் யானைகளுக்கான உணவு வழங்கும் பணி நடைபெற்றது. 3 யானைகளுக்கும் தினமும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அரிசி கொம்பன் ஆபரேசன் நிறைவடைந்ததால் ஏற்கனவே ஒரு கும்கி சென்று விட்ட நிலையில் மற்ற 2 கும்கிகளும் இன்று செல்ல உள்ளன என்றனர்.

இதனிடையே அரிசி கொம்பன் யானை சேதப்படுத்திய விளைநிலங்களின் மதிப்பு குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட உள்ளது. முன்னாள் எம்.பி. தங்கதமிழ்செல்வனுக்கு சொந்தமான வாழைத்தோட்டம், சண்முகா நதி அணையை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான வாழைத் தோட்டம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை அரிசி கொம்பன் சேதப்படுத்தியது. கடந்த 1 வாரமாக வனத்துறை அறிவுறுத்தலின்படி வேலைக்கு செல்லாமல் இருந்த தோட்டத்தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் சேதமடைந்த பயிர்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் இன்று அல்லது நாளை சேத மதிப்பீட்டை ஆய்வு செய்து அதன் அறிக்கையை மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News