வைகை ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம்: நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்களுக்கு தடை
- மதுரையின் பல்வேறு இடங்களில் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.
- தேனி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் வைகை அணைக்கு சுமார் 20000 கன அடி தண்ணீர் வருகிறது.
மதுரை:
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய மிதமான மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகள் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கண்மாய்கள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்நிலைகள் நிரம்பும் நிலையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மதுரையின் பல்வேறு இடங்களில் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டன. மதுரை நகரை பொறுத்தவரை கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம் பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். பரவலான மழை காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
வைகை கரையோர சர்வீஸ் சாலையிலும் கல்பாலம் அருகே தண்ணீர் தேங்கியுள்ளது. நீர்வரத்து அதிகப்பு காரணமாக மதுரை வைகை ஆற்றில் இறங்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றுக்குள் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்திலும் பரவலாக கனமழை பெய்து வருவதால் வைகை அணைக்கு சுமார் 20000 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியுள்ளது. மொத்த கொள்ளளவான 71 அடியை விரைவில் எட்டும் என்பதால் வைகை கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
எந்த நேரத்திலும் வைகை அணையில் இருந்து ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என்பதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளனர்.
கனமழை காரணமாக இன்று விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரையில் மிதமான மழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மதுரையில் வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்தார்.
இதனால் காலை நேரத்தில் மழை பெய்த போதும் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் நனைந்தபடியே சென்றனர். இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் அதிக அளவில் மாணவர்கள் பயணம் செய்ததால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
மதுரையில் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தத்தனேரி, கருடர் பாலம் பகுதியில் உள்ள சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்காத வகையில் அதனை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.