தமிழ்நாடு செய்திகள்

உவரி அருகே தூண்டில் வளைவு அமைக்ககோரி மீனவர்கள் வேலை நிறுத்தம்- நாளை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

Published On 2023-03-11 12:04 IST   |   Update On 2023-03-11 12:05:00 IST
  • கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • தூண்டில் வளைவு அமைக்க அரசை வலியுறுத்தி கூடுதாழை மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதாழை மீனவர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகமாக உள்ளது நேற்று மாலை திடீர் என கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு கடல்நீர் சுமார் 30 மீட்டர் அளவிற்கு வெளியேறியது. இதன் காரணமாக கடற்கரையில் நின்ற மின்கம்பம் சரிந்தது. மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த மீன்பிடி பைபர் படகுகளை கடல் அலைகள் கடலுக்குள் இழுத்து சென்றது. கடற்கரையில் சுமார் 7 அடி உயரத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

கடற்கரையில் கட்டப்பட்டு இருந்த மீன் வலைபின்னும் கூடம் (பண்டகசாலை) இடிந்துவிழுந்தது. எந்த நேரத்திலும் கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று அங்குள்ள ஆலய ஒலிபெருக்கி மூலம் மீனவர்கள் அழைக்கப்பட்டனர். பின்பு பங்குதந்தை வில்லியம் தலைமையில் நடந்த ஊர் கூட்டத்தில் நாளை (ஞாயிற்றுகிழமை) காலை கூடுதாழை விலக்கில் (திருச்செந்தூர்- உவரி ரோடு) பங்குதந்தை தலைமையில் தூண்டில் வளைவு அமைக்க அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தூண்டில் வளைவு அமைக்க அரசை வலியுறுத்தி கூடுதாழை மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News