தமிழ்நாடு செய்திகள்

தூண்டில் வளைவு கட்டுவதில் பசுமை தீர்பாய வழக்கு தடையாக உள்ளது: மீன்வளத்துறை அமைச்சர் பேட்டி

Published On 2022-12-12 18:34 IST   |   Update On 2022-12-12 18:34:00 IST
  • புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
  • பாதிக்கப்பட்டுள்ள படகுகள், மீன்பிடி வலைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மாமல்லபுரம்:

வங்கக்கடலில் உருவான "மாண்டஸ்" புயல் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கல்பாக்கம் அருகே உள்ள கடலோர பகுதிகளான உய்யாலிகுப்பம், புதுபட்டினம்குப்பம் போன்ற பகுதிகளை இன்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, மாவட்ட செயலாளர் சுந்தர், மீன்வளத்துறை கமிஷனர் பழனிசாமி மற்றும் அதிகாரிளுடன் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் உய்யாலிகுப்பம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள படகுகள், மீன்பிடி வலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், அவற்றிற்கு உரிய நிவாரணம் வழங்க முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அனைத்து மீனவர்கள் பகுதிகளிலும் கிராமங்ககளை பாதுகாக்க தூண்டில் வளைவு அமைப்பது போன்ற திட்டங்கள் இருந்தாலும் நீதிமன்றத்தில் பசுமை தீர்ப்பாயம் வழக்கு உள்ளது, அது சரியானதும் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். உய்யாலிகுப்பம் பகுதியில் ஆய்வை முடித்துக்கொண்ட அமைச்சர் அங்கிருந்து செய்யூர் வட்டம், கடலூர், சின்னகுப்பம், பெரியகுப்பம், ஆலிகுப்பம் போன்ற பகுதிகளை ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News