தமிழ்நாடு

இ.எஸ்.ஐ. பணத்தை செலுத்தவில்லை: நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் ஜெயில்- எழும்பூர் கோர்ட்டு உத்தரவு

Published On 2023-08-11 05:35 GMT   |   Update On 2023-08-11 07:00 GMT
  • இ.எஸ்.ஐ. பணத்தை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
  • ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

சென்னை:

பிரபல நடிகை ஜெயபிரதா தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். எம்.பி.யாகவும் இவர் இருந்துள்ளார்.

இவர் சென்னை அண்ணாசாலையில் ராம்குமார் ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து தியேட்டர் ஒன்றை நடத்தி வந்தார்.

அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. பணத்தை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தொழி லாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் எழும்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயப்பிரதா சார்பில் ஆஜரான வக்கீல் தொழிலாளர்களின் இ.எஸ்.ஐ. பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக தெரிவித்தார்.

இதற்கு தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் ஆஜரான வக்கீல் கவுசிக் எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட எழும்பூர் கோர்ட்டு ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கை எதிர்த்து ஜெயப்பிரதா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்திருந்த மனுவை ஐகோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News