தமிழ்நாடு

ஈரோட்டில் கனி மார்க்கெட் ஜவுளி சந்தை அடைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

ஈரோடு ஜவுளி சந்தை இன்று அடைப்பு- அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு

Published On 2023-08-22 05:16 GMT   |   Update On 2023-08-22 05:16 GMT
  • சாதாரண நாட்களில் ரூ.2 முதல் 3 கோடி வரையும், பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரையும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
  • வணிக வளாகத்தில் ஜவுளி சந்தை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

ஈரோடு:

ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் ஈரோடு கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) செயல்பட்டு வருகிறது. இங்கு வாரச்சந்தை மற்றும் 240-க்கும் மேற்பட்ட தினசரி கடைகள் செயல்பட்டு வருகிறது.

இங்கு நடைபெறும் வார ஜவுளி சந்தை உலக புகழ் பெற்றது. திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை வார சந்தை நடைபெறுகிறது.

கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வார சந்தைக்கு வருவது வழக்கம்.

சாதாரண நாட்களில் ரூ.2 முதல் 3 கோடி வரையும், பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரையும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 2019 வருடம் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டு மார்க்கெட் பகுதி அருகே ரூ.54 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டப்பட்டது. இந்த வணிக வளாகத்தில் மொத்தம் 262 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வணிக வளாகத்தில் ஜவுளி சந்தை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் மாநகராட்சி சார்பில் பொது ஏலத்தில் கடைகள் விட முடிவு செய்யப்பட்டது. மேலும் வைப்பு தொகையாக ரூ.8 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதற்கு ஜவுளி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-

நாங்கள் இந்த பகுதியில் சுமார் 45 வருடமாக ஜவுளிக்கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்து கிறோம். இந்நிலையில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டப்பட்டுள்ளது. அதில் 262 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது இடத்தில் கடைகளை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொது ஏலத்தில் கடைகளை ஏலத்தில் விடகூடாது மாறாக ஜவுளி வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து விட வேண்டும். அதேபோன்று வைப்பு நிதி தொகை அதிகமாக உள்ளது. அதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

மேலும் தற்போது நாங்கள் கொடுக்கும் வாடகையை 12 மாத வைப்பு நிதியாக செலுத்த தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News