திருவேற்காட்டில் டெங்கு கொசு ஒழிப்பு: ஒரே நாளில் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிப்பு
- டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.
பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருவேற்காடு நகர் மன்ற தலைவர் மூர்த்தி ஆலோசனையின்படி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா மேற்பார்வையில் துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் ஊழியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா கூறும்போது, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுப்புழு ஆதாரங்களை அழிப்பதற்காக நகராட்சியில் இருந்து 105 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். நூம்பல் பகுதியில் தனியார் தொழிற்சாலை மற்றும் தனியார் பள்ளியில் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததால் ஒரே நாளில் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றார்.