தமிழ்நாடு

அங்கிட் திவாரி விவகாரம்- தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்

Published On 2023-12-27 16:11 GMT   |   Update On 2023-12-27 16:20 GMT
  • அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
  • சம்மனில் செவ்வாய்கிழமை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர் சுரேஷ்பாபு சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதற்கு மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சூழலில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது சட்டவிரோத செயல் என்றும், சோதனை என்ற பெயரில் அடையாளம் தெரியாத ஏராளமான பேர் புகுந்து வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை திருடி சென்றுவிட்டனர் என்றும் அமலாக்கத்துறை சார்பில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு பரபரப்பு புகார் மனு அனுப்பப்பட்டது. இந்த புகாரை தமிழக போலீசார் மறுத்தனர்.

இந்நிலையில், அங்கிட் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும், சம்மனில் விரிவான தகவல் இல்லை எனவும் குறிப்பாக யார் அனுப்பிய சம்மன்? எனவும் எங்களுக்கு தெரியவில்லை என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

அந்த சம்மனில் செவ்வாய்கிழமை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News