மூதாட்டி முத்தம்மா கதறி அழும் காட்சி.
7 பிள்ளைகளை பெற்றும் கவனிப்பாரின்றி தவிக்கும் மூதாட்டி- ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தஞ்சம்
- வயதான காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கண்ணீர் மல்க அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடம் கூறி அழுதார்.
- ஓவேலியில் எஸ்டேட்டில் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டதாகவும், அனைத்து பிள்ளைகளையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்ததாக கூறினார்.
கூடலூர்:
தென்னையை வளர்த்தால் இளநீர்... பிள்ளையை பெற்றால் கண்ணீர் என்ற திரைப்பட பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டதை போல சம்பவம் நிகழ்ந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி நியூஹோப் பகுதியை சேர்ந்தவர் முத்தம்மா (வயது 81). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். முத்தம்மாவுக்கு 3 ஆண், 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் முத்தம்மா நேற்று கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் பிள்ளைகள் யாரும் கவனிப்பது இல்லை. இதனால் வயதான காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கண்ணீர் மல்க அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடம் கூறி அழுதார். தொடர்ந்து அதிகாரிகளை சந்திக்க வந்துள்ளதாக தெரிவித்தார். அங்கு ஆர்.டி.ஓ. இல்லாததால் கிராம நிர்வாக அலுவலர் சாம் சுந்தரி, கிராம உதவியாளர் சதீஷ் ஆகியோர் மூதாட்டி முத்தம்மாவிடம் விசாரித்தனர்.
ஓவேலியில் எஸ்டேட்டில் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டதாகவும், அனைத்து பிள்ளைகளையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்ததாக கூறினார். ஆனால், தற்போது தன்னை கவனிப்பதற்கு யாரும் முன் வருவதில்லை. எனவே, வயதான காலத்தில் நிம்மதியாக இருப்பதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததாக தெரிவித்தார்.
மூதாட்டியின் நிலையை கண்ட வருவாய்த்துறையினர் கூடலூர் போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 7 பிள்ளைகளை பெற்றும் கவனிப்பாரின்றி மூதாட்டி ஒருவர் கண்ணீருடன் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.