தமிழ்நாடு

அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி

Published On 2023-12-20 06:29 GMT   |   Update On 2023-12-20 06:29 GMT
  • டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
  • பணத்தை பெற்றுக் கொண்டு காரில் தப்பிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

மதுரை:

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் சுரேஷ் பாபு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க தனக்கு ரூ.3 கோடி லஞ்சம் வேண்டும் என மதுரை அமலாக்கத்துறையில் பணிபுரியும் துணை இயக்குனர் அங்கிட் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவை அணுகி உள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். தொடர்ந்து வாட்ஸ்ஆப் மூலமாக அங்கிட் திவாரி, மீதியுள்ள ரூ.31 லட்சத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இதனையடுத்து டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ரசாயன கலவை தடவிய ரூபாய் நோட்டு கட்டுகளை பேக்கில் வைத்து சுரேஷ் பாபு கொடுத்தார். அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு காரில் தப்பிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர். அங்கிட் திவாரியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்த நிலையில் அங்கிட் திவாரி தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி அங்கிட் திவாரிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.

இன்று காலை ஜாமீன் வழக்கு குறித்து நீதிபதி சிவஞானம், அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News