சென்னையில் அதிகாலையிலேயே கொட்டித்தீர்த்த மழை
- கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.
தமிழ்நாட்டில் நேற்று மற்றும் 14, 15 ஆகிய நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று மற்றும் 13, 16-ந்தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் கூறியது. நேற்றைய தினத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவு முதலே மிதமான மழை பெய்தது. மேலும், இன்று காலை 6 மணியளவில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், மணலி, மாதவரம், புழல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.