தமிழ்நாடு செய்திகள்

கொடைக்கானலில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: தி.வி.க.வினர் கைது

Published On 2023-08-30 12:36 IST   |   Update On 2023-08-30 12:36:00 IST
  • திராவிடர் விடுதலை கழகத்தினர் கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகளை கைது செய்து தனி வாகனம் மூலம் பழனிக்கு அனுப்பி வைத்தனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் வருகை தந்தார். கவர்னர் வருகையை முன்னிட்டு கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி அபினவ்குமார் உத்தரவின்பேரில் தேனி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பிக்கள் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலுக்கு கவர்னர் வருகையை கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் மசோதாவிற்கு கையெழுத்திடாமல் இருப்பது மற்றும் தமிழக உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது போன்ற விசயங்களை எடுத்துக்கூறி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றும் செல்லவில்லை. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகளை கைது செய்து தனி வாகனம் மூலம் பழனிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் வேறு யாரேனும் போராட்டத்தில் ஈடுபடாத வகையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் கவர்னர் தங்கியுள்ள கோகினூர் மாளிகை முன்பு யாரும் உள்ளே வராத அளவிற்கு தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News