டி.எஸ்.பி. தையல்நாயகி
எம்.ஜி.ஆர். பாடலை பாடி பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பெண் டி.எஸ்.பி.
- பள்ளி குழந்தைகள் மத்தியில் பேசிய தையல் நாயகி, உங்களில் யார் எல்லாம் எதிர்காலத்தில் போலீஸ் ஆக விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
- மாணவர்கள் பலரும் உற்சாகமாக கைதூக்கினார்கள்.
சூலூர்:
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஊஞ்சபாளையம் நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் கருமத்தம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி தையல் நாயகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது பள்ளி குழந்தைகள் மத்தியில் பேசிய தையல் நாயகி, உங்களில் யார் எல்லாம் எதிர்காலத்தில் போலீஸ் ஆக விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பல மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கை தூக்கினார்கள். அப்போது நீங்கள் நன்றாக படித்தால் போலீசாக முடியும். சமூகத்தில் திறமைவாய்ந்த குடிமகனாக உருவாக முடியும் என்று அறிவுரை கூறினார்.
இதனை தொடர்ந்து டி.எஸ்.பி தையல்நாயகி மாணவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி எழுதிய நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி எனத் தொடங்கும் சினிமா பாடலை ராகம் போட்டு பாடினார். இதனை குழந்தைகளும் ஒருசேர பாடி மகிழ்ந்தனர்.
சினிமா பாடலின் முடிவில் மூன்றும் இருந்தால் தலைவனாகலாம் என்று பாடி முடித்த தையல் நாயகி, உங்களில் யார் எல்லாம் தலைவராக விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் பலரும் உற்சாகமாக கைதூக்கினார்கள்.
இதனை தொடர்ந்து ஊஞ்சபாளையத்தில் புதிதாக சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஸ்கூல் பேக், டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் டி.எஸ்.பி தையல்நாயகி சினிமா பாடல் பாடிய போது, சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்து உள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.