தமிழ்நாடு செய்திகள்

போடி அருகே கோவில் திருவிழாவில் விதவிதமான வேடமிட்டு வந்த பக்தர்கள்

Published On 2023-05-06 15:59 IST   |   Update On 2023-05-06 15:59:00 IST
  • கிராமிய பெண் நடனக் கலைஞர்கள், அகோரிகள், அரக்கர்கள், தவ முனிவர்கள் உள்பட பல்வேறு வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக வந்தது அனைவரையும் கவர்ந்தது.
  • இளம் சிறுமிகள் கோலாட்டம் ஆடி வந்ததும் இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடி வந்ததும் பொதுமக்களை மிகவும் கவர்ந்தது.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது பத்திரகாளி புரம். இங்கு மிகவும் பழமையும் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. போடிநாயக்கனூரைச் சுற்றியுள்ள பழமையான கோவில்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக் கோவிலின் பெயரிலேயே பத்திரகாளிபுரம் என்று ஊர் பெயரும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சுமார் 7 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பல்வேறு வேடமிட்டு பத்திரகாளிபுரம் கோவிலில் இருந்து போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆறு வரை சுமார் 8 கி.மீ தொலைவிற்கு பக்தர்கள் நடனமாடி வந்தனர்.

கிராமிய பெண் நடனக் கலைஞர்கள், அகோரிகள், அரக்கர்கள், தவ முனிவர்கள் உள்பட பல்வேறு வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக வந்தது அனைவரையும் கவர்ந்தது. மேலும் இளம் சிறுமிகள் கோலாட்டம் ஆடி வந்ததும் இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடி வந்ததும் பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. பழமையான விளையாட்டு கட்டைக்காலுடன் இளைஞர்கள் நடந்து சென்றனர்.

குரங்கு போல் வேடமிட்ட ஒரு முதியவர் அனைவரையும் கவர்ந்தார். பல ஆண்டுகளாக இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறோம். இதன்மூலம் அமைதி நிலவி ஒற்றுமை வளர்வதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News