தமிழ்நாடு செய்திகள்

40 அடி பள்ளத்தில் சிக்கியவர்களின் உடல்கள் மீட்கப்படுவதில் தாமதம்: சம்பவ இடத்திலேயே கதறி அழும் புதுப்பெண்

Published On 2023-12-06 14:27 IST   |   Update On 2023-12-06 14:27:00 IST
  • ஜெயசீலன் சிக்கிக்கொண்டதை கேள்விப்பட்ட அவரது மனைவி மஞ்சு, தம்பி குணா மற்றும் பெற்றோர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
  • இன்றோடு மூன்று நாட்கள் ஆகியும் ஜெயசீலனை மீட்க முடியவில்லை.

மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஞாயிறு முதல் திங்கள் கிழமை இரவு வரை கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது

திங்கள் கிழமை சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதன் அருகில் ஒரு பெட்ரோல் பங்க் இயங்கி வந்தது. கட்டுமான வேலைக்காக அருகில் ஒரு கண்டெய்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது

திடீரென கட்டுமான வேலை நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு சுமார் 50 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.

இந்த பள்ளத்தில் பெட்ரோல் பங்க்-ல் வேலை பார்த்த சிலர் சிக்கிக்கொண்டனர். சுதாரித்துக்கொண்ட ஒரு சிலர் தப்பித்தனர்.

கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்த ஜெயசீலன் (வயது 29) கண்டெய்னர் உடன் தண்ணீருக்குள் மூழ்கினார். பெட்ரோல் பங்க் அருகில் நின்றவர்களும் ஒருவரோ இருவரோ தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என தெரிகிறது.

சென்னை எங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்ததால் உடனடியாக மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஜெயசீலன் சிக்கிக்கொண்டதை கேள்விப்பட்ட அவரது மனைவி மஞ்சு, தம்பி குணா மற்றும் பெற்றோர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஜெயசீலனுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆகிறது. இதனால் தனது கணவருக்கு என்ன ஆனதோ என மஞ்சு கதறி அழுதார்.

மீட்பு பணிக்கு ஆட்களை தேடியபோதிலும் மீட்கும் வகையில் போதுமான அதிகாரிகள் வரவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து ஜெயசீலன் உறவினர்கள் கூறும்போது,

செல்போன் மூலம் ஜெயசீலனுக்கு அழைப்பு வந்தது. ஜெனரேட்டர் இயக்க வேண்டும், உடனடியாக வேலைக்கு வரும்படி அழைத்தனர். மலையில் வர முடியாது என 'ஜெயசீலன் மறுத்தபோதிலும் வலுக்கட்டாயமாக வந்து தீர வேண்டும் என வற்புறுத்தினர்.

நிறுவனம் அழைத்ததால் வேறு வழியின்று சம்பவ இடத்திற்கு சென்றார்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஜெயசீலன் ஜெனரேட்டரை ஆபரேட் செய்த பின் கடும் மழை பெய்து வந்ததால் மழைக்கு ஒதுங்கியதாக தெரிகிறது.

அப்போதுதான் கண்டெய்னர் தண்ணீர் உடன் சேர்ந்து ஜெயசீலனும் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளார்.

இவ்வாறு தெரிவித்தனர்.

இன்றோடு மூன்று நாட்கள் ஆகியும் ஜெயசீலனை மீட்க முடியவில்லை. அவர் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை.

இருந்தபோதிலும் உடலையாவது மீட்பார்களா என்று அவரது மனைவி, தம்பி ஏக்கத்தோடு அந்த இடத்திலேயே இருந்து வருகின்றனர்.

புதுப்பெண்ணான அவரது மனைவி மூன்று நாட்களாக அதே இடத்தில் இருந்து கதறி அழுது வருவது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது தான் அந்த இடத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சுமார் 50 அடி ஆழமுள்ள அந்த பள்ளத்திலிருந்து தண்ணீர் அனைத்தும் வெளியேற்றிய பிறகுதான் அவரது உடல் மீட்கப்படும். மேலும் எத்தனை பேர் உடல் கிடக்கிறது என்பதும் தெரிய வரும்.

Tags:    

Similar News