தமிழ்நாடு

கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்கு திரண்ட மக்களை காணலாம்.

நாளை தீபாவளி பண்டிகை- கடலூர் துறைமுகத்தில் களைகட்டிய மீன்கள் வியாபாரம்

Published On 2022-10-23 05:45 GMT   |   Update On 2022-10-23 05:45 GMT
  • தீபாவளி மறுநாளில் இருந்து அமாவாசை மற்றும் சஷ்டிவிரதம் தொடங்க இருப்பதால் மீன் மற்றும் இறைச்சி வாங்குவதை கடலூர் மக்கள் தவிர்க்கின்றனர்.
  • கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் ஆகிய மீன்மார்க்கெட்டுகள் இன்று களைகட்டியது.

கடலூர்:

கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் உள்ளிட்ட பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது.

இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வியாபாரம் சூடுபிடிக்கும். கடந்த மாதம் புரட்டாசி மாதம் என்பதால் அசைவ பிரியர்கள் மீன்கள் எதுவும் வாங்கவில்லை. இதனால் புரட்டாசி மாதத்தில் மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

புரட்டாசி 3-வது சனிக்கிழமை முதல் பக்தர்கள் விரதத்தை முடித்துக்கொண்டனர். அன்று முதல் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. தற்போது ஐப்பசி மாதம் பிறந்துள்ளதால் மீன் மார்க்கெட்டுகளில் ஓரளவு கூட்டம் அதிகரித்து வருகிறது.

நாளை (24-ந் தேதி) தீபாவளி பண்டிகையாகும். எனவே வெளியூர்களில் வேலைபார்க்கும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கடலூருக்கு தற்போது வந்துள்ளனர். தீபாவளி மறுநாளில் இருந்து அமாவாசை மற்றும் சஷ்டிவிரதம் தொடங்க இருப்பதால் மீன் மற்றும் இறைச்சி வாங்குவதை கடலூர் மக்கள் தவிர்க்கின்றனர். எனவே தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று கூட்டம் அலைமோதியது.

இதன் காரணமாக கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் ஆகிய மீன்மார்க்கெட்டுகள் இன்று களைகட்டியது. அதிக அளவில் மக்கள் வந்துள்ளதால் மீன்கள் விலையும் கனிசமாக உயர்ந்து காணப்பட்டது.

Tags:    

Similar News