தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவில் மக்களுக்காகத்தான், யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2022-12-04 09:32 IST   |   Update On 2022-12-04 09:35:00 IST
  • முதலமைச்சரையே வேகமாக வேலை வாங்க கூடியவர் அமைச்சர் சேகர்பாபு.
  • இதுவரை இல்லாத அளவிற்கு கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். தாலியுடன் 30 சீர்வரிசைப் பொருட்களையும் முதலமைச்சர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: 


மக்கள் பணியே மகேசன் பணி என செயலாற்றி வருகிறோம். கோவில் என்பது மக்களுக்காகத்தான், கோவில் யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது. அரசியல் செய்ய எதுவும் கிடைக்காததால் சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். ஆதாரம் எதுவும் இன்றி குற்றச்சாட்டுக்களை சிலர் கூறி வருகின்றனர்.

அமைச்சர்களை முதலமைச்சர் வேலை வாங்குவதை பார்த்து இருக்கிறோம், முதலமைச்சரையே வேகமாக வேலை வாங்க கூடியவர் அமைச்சர் சேகர்பாபு. இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சாதனைகளை அவர் புரிந்து வருகிறார். தமிழகத்தில இதுவரை இல்லாத அளவிற்கு கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைவருக்குமான அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் நடைபெற்று வருகிறது.

மணமக்கள் ஒன்றோ இரண்டோ குழந்தையுடன் நிப்பாட்டிக் கொள்ள வேண்டும், அளவான குழந்தைகளை பெற்று அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும். மத்திய அரசும், தமிழக அரசும் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்திற்கு பெருமளவு செலவு செய்து வருகிறது. முன்பெல்லாம் நாம் இருவர் நமக்கு மூவர் என்று சொன்னோம். அது பின்னர் நாம் இருவர் நமக்கு இருவர் என்றும், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றும் மாறியது. தற்போது நாம் இருவர் நமக்கு எதுக்கு மற்றொருவர் என கூறப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News