தமிழ்நாடு செய்திகள்

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1,591 புதிய வீடுகள்: வேலூரில் முதலமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2023-09-17 10:47 IST   |   Update On 2023-09-17 12:02:00 IST
  • மேல்மொணவூா் முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 220 வீடுகளையும் பயனாளிகள் வசம் ஒப்படைத்தார்.
  • இலங்கை தமிழர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களை வழங்கினார்.

வேலூர்:

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக தமிழக அரசு சாா்பில் வீடு கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பா் மாதம் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் தொடங்கி வைத்தாா்.

இந்தத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ரூ.142.16 கோடியில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொணவூரிலுள்ள இலங்கைத் தமிழா் முகாமில் இன்று காலை நடந்தது.

இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று காணொலிக்காட்சி மூலம் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழா் முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 புதிய வீடுகளை திறந்து வைத்தார்.

மேலும், மேல்மொணவூா் முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 220 வீடுகளையும் பயனாளிகள் வசம் ஒப்படைத்தார்.

பின்னர் இலங்கை தமிழர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களை வழங்கினார். அப்போது குடியிருப்பில் உள்ள இலங்கைத் தமிழர்களிடம் முகாம்களில் உள்ள வசதிகள் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பயனாளிகள் இதற்கு முன்பு சிரமத்துடன் வசித்து வந்தோம் குடியிருப்பு கட்டப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக உருக்கமாக தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், செஞ்சி மஸ்தான், ஐ.பெரியசாமி சாமி, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, காந்தி, கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News