தமிழ்நாடு செய்திகள்

எனக்கு உடல்நலம் சரியில்லையா? - முதலமைச்சர் பதில்

Published On 2024-01-12 11:47 IST   |   Update On 2024-01-12 13:10:00 IST
  • மக்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சிதான் எனக்கு மருந்து.
  • எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள்.

சென்னை:

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அயலக தமிழர் தினவிழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உடல் நிலை பற்றி பேசியதாவது:-

எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா? மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? ஒவ்வொரு முறையும் நான் வெளிநாடுகளுக்கு வரும்போது நீங்கள் எப்படி மிக பிரமாண்டமாக வரவேற்பு கொடுப்பீர்களோ அதே மாதிரி ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் 3-வது முறையாக இந்த அயலகத் தமிழர் திருநாளில் உங்களது தாய் மண்ணுக்கு வரவேற்பதில் ரொம்ப மகிழ்ச்சி.

எனக்கு உடல் நலமில்லை, உற்சாகமாக இல்லை என்று நேற்று ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். அதை படித்தபோது எனக்கு சிரிப்பு தான் வந்தது.

எனக்கு என்ன குறை? தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறபோது அதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு.

நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். சென்னையை சேர்ந்த ஒரு சகோதரி பேசுறாங்க. கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் ரூ.1000 வந்து விட்டது. பொங்கல் பரிசாக ரூ.1000 வந்து விட்டது. அரிசி, சர்க்கரை, கரும்பு வந்து விட்டது. வெள்ள நிவாரணமாக ரூ.6000 கிடைத்துவிட்டது.

ஒரு மாதத்தில் முதலமைச்சரே 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டார். பொங்கலுக்கு யாரையும் நான் எதிர்பார்க்க தேவை இல்லை என்று அந்த சகோதரி பேட்டி கொடுத்து உள்ளார். அவர் முகத்தில் பார்க்கிற மகிழ்ச்சிதான் எனக்கான உற்சாக மருந்து.

எனக்கு மக்களை பற்றி தான் எப்போதும் நினைப்பே தவிர என்னைப் பற்றி இருந்ததில்லை. எந்த சூழலிலும் என்னோடு மக்கள் உள்ளனர். மக்களோடு இருப்பவன் தான் நான்.

என் சக்தியை மீறியும் உழைப்பவன் நான். இது மாதிரி செய்திகளை ஒதுக்கிவிட்டு உழைத்துக்கொண்டே இருப்பேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags:    

Similar News