தமிழ்நாடு

சென்னை வேப்பேரி ஈ.வே.ரா நெடுஞ்சாலையில் முடிவடையாத நிலையில் மழைநீர் கால்வாய் பணிகள்

கொட்ட தயாராகும் மழை- தாங்க தயாரா சென்னை?

Update: 2022-10-06 10:38 GMT
  • கனமழை பெய்து அதிக அளவு தண்ணீர் வந்தால் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற 719 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  • மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவில் குளங்களை சீரமைத்து வைக்க வேண்டும்.

மழை வருது...

மழை வருது...

என்றால் இது ஒரு மேட்டரா...?

மாதம் மும்மாரி மழை பெய்து செழித்த பூமிதானே நம்ம பூமி என்று கிராமத்து விவசாயி சிரிப்பான்.

அட உங்களுக்கு என்னப்பா ஊரு பக்கம் எவ்வளவு மழை பெய்தாலும் கவலை இல்லை. சென்னையில் அப்படியா? ஒரு மணிநேரம் வெளுத்து வாங்கிச்சுன்னா தண்ணீரில் மிதந்து தான் போகணும். இதுதான் இதுவரை நடந்த மழைக்கால அனுபவங்கள். இந்த ஆண்டாவது விடிவு காலம் பிறக்குமா என்பதுதான் சென்னைவாசிகளின் எதிர்பார்ப்பு.

அதற்கு முக்கிய காரணம் சென்னையில் எந்த பக்கம் திரும்பினாலும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மாத கணக்கில் நடக்கிறது. சின்ன சின்ன தெருக்களை கூட விட்டு வைக்க வில்லை. மழைநீர் கால்வாய் பணிகள் என்று தோண்டி போட்டுள்ளார்கள்.

எனவே இந்த பணிகள் முற்று பெற்று விட்டால் மழைநீர் தேக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்று கருதுகிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? பருவமழை தொடங்கட்டும் பார்ப்போம் என்கிறார்கள்.

பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மேயர் பிரியா கூறியதாவது:-

மழைநீர் வடிகால்வாய் பணிகள் வருகிற 15-ந்தேதிக்குள் முடிந்துவிடும். சிங்கார சென்னை முதல் பகுதி திட்டத்தில் 1354 கிலோ மீட்டர் நீளத்துக்கான கால்வாய் சீரமைப்பு பணிகளில் 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. 1030 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடைப்புகள் நீக்கப்பட்டு தூர்வாரி முடிக்கப்பட்டுள்ளது. 10-ந்தேதிக்குள் இந்த பணிகள் முடிவடையும். எங்கும் தண்ணீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்காவது தண்ணீர் தேங்கினால் 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். கடந்த ஆண்டை போல பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கூறும்போது, 'பணிகள் முடிந்த இடங்களில் உடனடியாக குழிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. குழிகள் உள்ள இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

கனமழை பெய்து அதிக அளவு தண்ணீர் வந்தால் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற 719 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதில் 400 மோட்டார்கள் 100 குதிரை திறன் சக்தி கொண்டது. இந்த மோட்டார்கள் ஒவ்வொன்றும் நிமிடத்துக்கு 11,700 லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் திறன் கொண்டவை.

கால்வாய்கள் இணைக்காத இடங்களில் ஏற்படும் தண்ணீர் தேக்கத்தை சமாளிக்க இந்த மோட்டார்கள் பயன்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள இடங்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.

34 இடங்களில் வெள்ளம் சூழ்வது தவிர்க்க முடியாது என்று கூறி உள்ளார்கள். அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைவெள்ள பாதுகாப்பு தொடர்பான தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சேகர் ராகவன் கூறும்போது, 'நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், கழிவு பொருட்களால் நிரம்பியும் கிடக்கின்றன. இந்த நிலையில் தண்ணீர் எப்படி போகும்?

மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவில் குளங்களை சீரமைத்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றினாலும் எங்கே போகும். மீண்டும் பழைய நிலைதான் ஏற்படும்' என்றார்.

சிவில் என்ஜினீயரான தயானந்த கிருஷ்ணன் கூறியதாவது:-

இணைக்கப்படாத கால்வாய்களை இணைப்பதில் இவ்வளவு காலதாமதம் ஏன்? 5 செ.மீ. மழை தண்ணீரை தங்கும் அளவுள்ள கால்வாய்களில் 10 செ.மீ. மழை வந்தால் எப்படி சமாளிப்பது? அதிலும் இப்போது மேக வெடிப்பு மூலம் மழை கொட்டுவதும் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News