தமிழ்நாடு

நாகர்கோவில் காசி மீதான மேலும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Published On 2024-02-19 03:32 GMT   |   Update On 2024-02-19 04:11 GMT
  • காசி மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார்.
  • இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக பழகி அதை வீடியோவாக பதிவு செய்வதோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமானது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி (வயது 29). இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குமரி மாவட்ட போலீசார் காசியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக பழகி அதை வீடியோவாக பதிவு செய்வதோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமானது.

காசி மீது கோட்டார், வடசேரி மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் பாலியல் வழக்கு, கந்துவட்டி வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் பதிவானது. பின்னர் இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் காசி மீது தொடரப்பட்ட ஒரு பாலியல் வழக்கில் காசிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து மீதமுள்ள 3 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொடுத்த பாலியல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள 1-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 900 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

Tags:    

Similar News