தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணையில் இன்று மத்திய கண்காணிப்பு துணைக்குழுவினர் ஆய்வு செய்ய வந்தனர்.

முல்லைப்பெரியாறு அணையில் இன்று மத்திய கண்காணிப்பு துணைக்குழு ஆய்வு

Published On 2023-08-17 07:12 GMT   |   Update On 2023-08-17 07:12 GMT
  • கேரள அரசு அணையின் உறுதி தன்மை குறித்து அடிக்கடி சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.
  • மாலையில் குமுளி 1-வது மைலில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்.

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

பருவநிலை மாறுபாடுகளின்போது முல்லைப்பெரியாறு அணையின் உறுதி தன்மை பராமரிப்பு பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய மத்திய தலைமை கண்காணிப்புக்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த குழுவுக்கு உதவியாக துணை மத்திய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த 2 குழுக்களும் உச்சநீதிமன்றத்தில் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிப்பார்கள். அதன்படி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கேரள அரசு அணையின் உறுதி தன்மை குறித்து அடிக்கடி சந்தேகம் கிளப்பி வருகின்றனர். ஆனால் மத்திய குழுவினர் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என அறிக்கை சமர்பித்துள்ளனர். கடந்த மே மாதம் 15-ந் தேதி மத்திய கண்காணிப்பு துணைக்குழு ஆய்வு நடத்தியது.

இந்த நிலையில் இன்று தலைவர் சதீஸ்குமார் தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசு சார்பில் அணையின் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் கட்டப்பணை நீர் பாசனத்துறை செயற்பொறியாளர் அனில்குமார், உதவி செயற்பொறியாளர் அருண் ஆகியோர் குழுவில் இடம் பெற்றனர். இந்தக்குழுவினர் மெயின் அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, மதகுகள் மற்றும் தண்ணீர் கசிவு பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

மேலும் மதகுகளையும் இயக்கிப்பார்த்து நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து சோதனையிட்டனர். பின்னர் மாலையில் குமுளி 1-வது மைலில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர். இதன் அறிக்கைகள் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News