ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையோரம் உள்ள 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது- பொதுமக்கள் தவிப்பு
- கொடுமுடி காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- கொடுமுடி பேரூராட்சிக்குட்பட்ட இலுப்பை தோப்பு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
ஈரோடு:
கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை ஏற்கனவே தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து 1.75 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி ஆற்றங்கரைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரை பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலுக்குள் வெள்ளம் சூழ்ந்தது.
அதேபோல் முனியப்பன் கோவிலுக்கு செல்லும் சாலையில் வெள்ளம் சூழ்ந்து அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 200 வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாமல் சிரமம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாசில்தார் சதீஷ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துரித நடவடிக்கை எடுத்து வருகிறார். அருகிலுள்ள திருமண மண்டபத்தில் மக்களை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கருங்கல்பாளையம் போலீசார், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதேபோல் பவானி தினசரி மார்க்கெட் அருகே உள்ள பரமேஸ்வரர் வீதி, பூக்கடை அருகே உள்ள பாலக்கரை மற்றும் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவிரி நகர், காவிரி வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பவானி தாசில்தார் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மக்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.
அந்தப் பகுதிக்குள் பொதுமக்கள் செல்லாதபடி பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் வீடுகளில் இருந்த பொருட்கள் சில ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.
இதேபோல் கொடுமுடி காவிரி ஆற்றங்கரை பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொடுமுடி பேரூராட்சிக்குட்பட்ட இலுப்பை தோப்பு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்த பகுதியில் 44 குடும்பங்களை சேர்ந்த 165 பேர் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான வசதிகளை கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி, மண்டல துணை தாசில்தார் பரமசிவம், பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், வருவாய் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளை வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.