தமிழ்நாடு

காவேரி கூக்குரல் சார்பில் மற்றொரு பிரமாண்ட கருத்தரங்கு- திருச்சியில் நாளை நடக்கிறது

Published On 2022-09-17 11:57 GMT   |   Update On 2022-09-17 11:57 GMT
  • காவேரி கூக்குரல் இயக்கத்தினர் விவசாயிகளை நேரில் சந்தித்து இலவச ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
  • கரத்தரங்கில் மரங்களை வளர்க்கும் முன்னோடி விவசாயிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியால் தமிழக விவசாயிகளிடம் 'மரம்சார்ந்த விவசாயம் செய்ய வேண்டும்' என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்கும் விதமாக திருச்சியில் மாபெரும் மரப் பயிர் சாகுபடி கருத்தரங்கு நாளை (18-ம் தேதி) நடைபெற உள்ளது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம்சார்ந்த விவசாய முறையை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். இதற்கு தமிழக விவசாயிகளிடம் சிறப்பான வரவேற்பு உள்ளது.

மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் செய்தியாளர் சந்திப்பு

எங்களுடைய களப் பணியாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகளை நேரில் சந்தித்து இலவச ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். அத்துடன் இம்முறையை பின்பற்றி நன்கு லாபகரமாக விவசாயம் செய்து வரும் முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களில் கருத்தரங்கு மற்றும் களப் பயிற்சிகளை நடத்தி வருகிறோம்.

அந்த வகையில், திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவில் உள்ள கொப்பம்பட்டியில் நடைபெறும் இக்கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகளும், வேளாண் வல்லுனர்களும் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

இதில் வன மரபியல் மற்றும் மரப் பெருக்கு நிறுவனத்தின் (IFGTB) விஞ்ஞானி டாக்டர். மாயவேல் அவர்கள் 'மலைவேம்பில் மலைக்க வைக்கும் வருமானம்' எனும் தலைப்பிலும், ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குனர் டாக்டர் ஹரிதாஸ் அவர்கள் 'பலா – பழமும் தரும், மரம் மூலம் மொத்த பணமும் தரும்' எனும் தலைப்பிலும், பல்லடத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி திரு. துரைசாமி அவர்கள் '4 அடுக்கு பாதுகாப்பில் 40 ஏக்கரில் சந்தன மரங்கள் 'என்ற தலைப்பிலும், காரைக்குடியை சேர்ந்த ஆசிரியர் திரு. ராமன் அவர்கள்'மழை நீரே போதும் – 60 ஏக்கர் நிலத்தில் அற்புத காடு' என்ற தலைப்பிலும், பண்ருட்டியில் சமவெளியில் மிளகு பயிரிடும் விவசாயி திரு. திருமலை அவர்கள் 'கருப்பு பனையில் கருப்பு தங்கம் ( மிளகு)' என்ற தலைப்பிலும் பேசவுள்ளனர். மேலும், தேக்கு, குமிழ் தேக்கு, மகோகனி, வேங்கை போன்ற மரங்களை வளர்க்கும் முன்னோடி விவசாயிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

இக்கருத்தரங்கு நடைபெறும் 'லிட்டில் ஊட்டி' என்ற பெயரிலான வேளாண் காட்டில் சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்ட பல்வேறு வகை மரங்களை அக்காட்டின் உரிமையாளர் டாக்டர் துரைசாமி வளர்த்து வருகிறார். அந்த பிரமாண்ட வேளாண் காட்டை விவசாயிகள் சுற்றி பார்க்கும் 'பண்ணை பார்வையிடல்' இந்நிகழ்வும் அன்றைய தினம் நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் 94425 90079, 94425 90081 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News