தமிழ்நாடு செய்திகள்

கார் மோதி விபத்து: காங்கிரஸ் மாவட்ட தலைவர் பலி

Published On 2023-09-26 09:10 IST   |   Update On 2023-09-26 15:46:00 IST
  • அளவூர் நாகராஜ் சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றார்.
  • விபத்து குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் அளவூர் நாகராஜ் (வயது57). இவர் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்தார்.

நேற்று இரவு அளவூர் நாகராஜ் சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றார்.

போகும் வழியில் சித்தாலப்பாக்கத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை அவரது வீட்டில் விட்டு விட்டு காமாஜபுரம் வழியாக தாம்பரம் நோக்கி சென்றார்.

அப்போது காரை நிறுத்தி விட்டு ரோட்டோர கடையில் சாப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஒரு தனியார் நிறுவன காரில் வந்தவர்களும் காரை நிறுத்தி விட்டு சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அந்த காரில் வந்தவர்கள் சாப்பிட்டு முடித்ததும் உதவியாளர் காரை கிளப்பி இருக்கிறார். ஹேன்ட்பிரேக்கில் நின்று கொண்டிருந்த அந்த காரை உதவியாளர் எடுக்க தெரியாமல் எடுத்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்று கொண்டிருந்த அளவூர் நாகராஜ் மீது மோதியது. இதில் காருக்குள் சிக்கிய அளவூர் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும்போது, உணவகத்தில் உணவு அருந்தி விட்டு சாலை அருகில் நின்று கொண்டிருந்த காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அளவூர் வி. நாகராஜ் எதிர்பாராத விதமாக கார் மோதியதில் காலமான செய்தி கேட்டு அளவற்ற அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். ஐந்து மணி நேரம் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த அவர் அரங்கத்தின் கீழே அமர்ந்திருந்ததை பார்த்து மேடையில் வந்து அமருங்கள் என்று கூறினேன்.

அதற்கு பிறகு அன்று இரவே விபத்தில் காலமான செய்தி எனது நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. இழக்கக்கூடாத ஒருவரை இழந்து விட்டோம்.

காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும், குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சிகளை மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வந்த ஒரு செயல் வீரராக அவர் திகழ்ந்தார். அளவூர் நாகராஜ் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News