தமிழ்நாடு

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நடந்த சிறுவன் கொலை வழக்கில் அதிகாரி உள்பட 6 பேர் கைது

Published On 2023-01-14 06:54 GMT   |   Update On 2023-01-14 06:54 GMT
  • சிறுவர் சீர்திருத்த பள்ளி சூப்பிரண்டு மோகன் உடனடியாக சிறுவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
  • செங்கல்பட்டு டவுன் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.

செங்கல்பட்டு:

தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கடந்த 30-ந் தேதி 17 வயது கொண்ட சிறுவனை திருட்டு வழக்கில் கைது செய்தனர். 31-ந் தேதி அவன் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

அன்று மாலை சிறுவனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. சிறுவர் சீர்திருத்த பள்ளி சூப்பிரண்டு மோகன் உடனடியாக சிறுவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்தான்.

இதுதொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். செங்கல்பட்டு, முதன்மை குற்றவியல் நீதிபதி முன்பு சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு சிறுவனின் உடல் மருத்துவ பரிசோதனைக்காக கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து செங்கல்பட்டு டவுன் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.

இந்தநிலையில் சிறுவன் கொலை தொடர்பாக சிறுவர் சீர்திருத்த பள்ளி சூப்பிரண்டு மோகன், துணை சூப்பிரண்டு நித்யானந்தம், காவலர்கள் சரண்ராஜ், ஆனந்தராஜ், விஜயகுமார், சந்திரபாபு ஆகிய 6 பேரை செங்கல்பட்டு டவுன் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News