தமிழ்நாடு

அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டியபோது கைவிரலை துண்டித்துக் கொண்ட பா.ஜ.க. நிர்வாகி

Published On 2024-04-18 06:54 GMT   |   Update On 2024-04-18 07:00 GMT
  • திடீரென துரைராமலிங்கம் தனது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார்.
  • உடனடியாக அவரை மீட்டு கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கோவை:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆண்டாள் முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம் (வயது 55). இவர் கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா துணை தலைவராக பதவி வகித்து வருகிறார்.

கோவை தொகுதியில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் கடந்த 10 நாட்களாக கோவையில் முகாமிட்டு அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று ஹோப் கல்லூரி அருகே திடீரென துரைராமலிங்கம் தனது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார். இதை பார்த்து அருகில் நின்ற பா.ஜ.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கைவிரலை துண்டித்தது குறித்து துரைராமலிங்கம் கூறியதாவது:-

நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளேன். 10 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்து அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தேன். நேற்று ஹோப் கல்லூரி பகுதியில் பிரசாரம் செய்தபோது அருகில் நின்ற சிலர் அண்ணாமலை தோல்வியை சந்திப்பார் என்று கூறினர். இது எனக்கு மிகுந்த மனவேதனையை தந்தது. இதனால் அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது விரலை வெட்டிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News