தமிழ்நாடு

ஜாமீன் பெற முயற்சி: திண்டுக்கல் கோர்ட்டில் அங்கித் திவாரியின் பாஸ்போர்ட்டை ஒப்படைத்த பெற்றோர்

Published On 2024-03-22 08:42 GMT   |   Update On 2024-03-22 08:42 GMT
  • தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.
  • தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டராக உள்ள சுரேஷ் பாபுவிடம் 2 தவணைகளாக ரூ.40 லட்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.

திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசியாக கடந்த 20-ந் தேதி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சுப்ரீம் கோர்ட்டில் அங்கித் திவாரி சார்பில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அங்கித் திவாரிக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டது.

அந்த உத்தரவில் திண்டுக்கல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அப்போது அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் கோர்ட்டில் அங்கித் திவாரியின் பெற்றோர் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வந்தனர். அதனுடன் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இடைக்கால நிபந்தனை ஜாமீன் நகலையும் வழங்கினர். இதனைத் தொடர்ந்து விரைவில் அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படும் என அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News