தமிழ்நாடு

பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 1½ அடி உயர்வு

Published On 2024-05-27 04:23 GMT   |   Update On 2024-05-27 04:23 GMT
  • மணிமுத்தாறு அணைக்கு 177 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
  • தென்காசி மாவட்டத்திலும் மழை குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

குறிப்பாக மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 13 அடியும், சேர்வலாறு அணை 21 அடி வரையிலும் உயர்ந்தது. நேற்று மழை வெகுவாக குறைந்துவிட்டதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறையத் தொடங்கியது.

பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு 4 ஆயிரம் கனஅடி வரை வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 736 அடியாக குறைந்தது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 1 1/2 அடி உயர்ந்து 67.70 அடியை எட்டியுள்ளது. மற்ற அணைகளின் நீர்மட்டம் உயர்வில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. மணிமுத்தாறு அணைக்கு 177 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

மலைப்பகுதியில் மழை பெய்யாமல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு இதமான காற்று வீசி வருகிறது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அடித்து வருகிறது. அவ்வப்போது வீசும் காற்றால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அக்னி வெயில் காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் ஒரு வழியாக முடிந்துவிட்டது என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

தென்காசி மாவட்டத்திலும் மழை குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. அங்குள்ள மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக சென்று குளித்து மகிழ்கின்றனர். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் ரம்மியமான காற்று வீசு வருகிறது.

வழக்கமாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி விடும். அதற்கு முன்னோட்டமாக மே மாதம் கடைசியில் இருந்தே கேரளாவில் மழை பெய்ய தொடங்குவதோடு, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று வீசும். அந்த வகையில் கடந்த 2 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் காற்று வீச தொடங்கி உள்ளது.

மாலையில் தொடங்கி இரவிலும் காற்று பலமாக வீசி வருகிறது.

ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. தொடர்ந்து வீசிவரும் இந்த இதமான காற்றால் தென்மேற்கு பருவ காலம் தொடங்கிவிட்டதோ என்று மக்கள் எண்ண தொடங்கியுள்ளனர்.

Tags:    

Similar News