அன்புமணி ராமதாஸ்
நெல் கொள்முதல் விலையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
- கடந்த ஆண்டின் கொள்முதல் விலையைவிட மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.100 மட்டுமே உயர்த்தியுள்ளது.
- நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
சென்னை:
டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 2022-2023-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கவிருக்கும் நிலையில், சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.75-ம், சன்ன ரக நெல்லுக்கு ரூ.100-ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
நெல்லுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாட்டு விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
கடந்த ஆண்டின் கொள்முதல் விலையைவிட மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.100 மட்டுமே உயர்த்தியுள்ளது. மத்திய அரசு கொள்முதல் விலையை திருப்தியளிக்கும் அளவுக்கு உயர்த்தாத நிலையில், மாநில அரசுதான் ஊக்கத்தொகையை உயர்த்தி விவசாயிகளின் எதிர்பார்ப்பை ஓரளவாவது ஈடுசெய்ய வேண்டும்.
கடந்த ஜூன் மாதம் நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு அறிவித்த போதே, தமிழக அரசு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பா.ம.க. கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தமிழக அரசு அந்த கோரிக்கையை பரிசீலிக்கக்கூட இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதுதான். கடந்த 2020-ம் ஆண்டு வரை இதே கோரிக்கையை இன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் எழுப்பிக் கொண்டிருந்தார்.
அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் இப்போது அவரது கைகளுக்கே வந்துவிட்ட நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இதைவிட சிறந்த தருணம் வாய்க்காது.
எனவே, இனிமேலும் தாமதிக்காமல் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலையாக ரூ.3 ஆயிரம் கிடைக்கும் வகையில், நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.