தமிழ்நாடு செய்திகள்

அனைத்து சமுதாயத்தினரையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும்- அன்புமணி அறிவிப்பு

Published On 2024-06-28 09:31 IST   |   Update On 2024-06-28 09:31:00 IST
  • விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறவேண்டும்.
  • இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த கணக்கெடுப்புக்கும் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

விழுப்புரம்:

பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட ஆசூர்கிராமத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வீதி வீதியாக நடந்தே சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறவேண்டும். ஆளும்கட்சியைச் சேர்ந்த 9 அமைச்சர்கள், அவரை சார்ந்தவர்கள் இங்கேயே தங்கியிருந்து மக்களுக்கு எப்படி பணம் கொடுக்கலாம், எவ்வாறு வாக்குகளை பெறலாம் என திட்டமிட்டுள்ளனர்.

சட்டசபையில் முதலமைச்சரும், அமைச்சர்களும் சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சம்பந்தமாக பல பொய்களை பேசியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

இங்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் நீதிமன்றம் தடை செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும், மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் சொல்கிறார். ஒவ்வொரு சமுதாயமும் என்னென்ன நிலைமையில் இருக்கிறது, எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது, அவர்களுக்கான இடஒதுக்கீடு பயன்படுகிறதா என்று மாநில அரசு சர்வே எடுத்தால்தான் தெரியும்.

இதைக்கூட நடத்த மாட்டோம் என்று முதலமைச்சர் சொல்வது மோசமான நிர்வாகமாக பார்க்கிறேன். ஆண்டுதோறும் பறவைகளை கணக்கெடுக்கிறீர்கள், தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கணக்கெடுக்கப்படுகிறது. ஏன் அரசு பஸ்கள் எவ்வளவு இயக்குவதற்கு தகுதியானது என கணக்கெடுக்கிறீர்கள், மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க தகுதியான மாணவர்களை கணக்கெடுப்பு செய்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு மக்கள் எப்படி இருக்கிறார்கள் என கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டுகிறார்கள். சமூகநீதிக்காகசாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க. அரசு தயக்கம், காட்டுவது ஏன்? இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த கணக்கெடுப்புக்கும் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டபோது எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை, நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால் வன்னியர்களுக்கு மட்டும் கொடுக்க மறுப்பது ஏன்? உங்களுக்கு அதிகாரம் இருந்தும் இல்லை, இல்லை என்று பொய் சொல்கிறீர்கள். இது இடைத்தேர்தல் பிரச்சனை கிடையாது.சமூகநீதிப் பிரச்சனை.

விரைவில் அனைத்து சமுதாயத்தினரையும் திரட்டிபோராட்டம் நடத்துவோம். கருணாநிதி மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இதற்கு எப்போதோ கையெழுத்து போட்டிருப்பார். ஏனெனில் அவருக்கு சமூகநீதி உணர்வு உண்டு. வன்னியர்களுக்காக இடஒதுக்கீடு பிரச்சனை, சமூகநீதி பிரச்சனை தொடர்பாக நான் தமிழக அமைச்சர்களுடன் விவாதம் நடத்த தயார். சட்டசபையில் சபாநாயகர் யாரையும் பேச விடுவதில்லை. அமைச்சர் பேசக்கூடியதை அவரே பேசி விடுகிறார். ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைய இருப்பதை பா.ம.க. வரவேற்கிறது. அப்போதுதான் அப்பகுதி வளர்ச்சி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News