தமிழ்நாடு
முழு கொள்ளளவை எட்டியதால் கடல் போல் காட்சியளிக்கும் அமராவதி அணை.

முழு கொள்ளளவை எட்டிய அமராவதி அணை- ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம்

Published On 2022-12-12 05:01 GMT   |   Update On 2022-12-12 05:01 GMT
  • அமராவதி அணையில் இருந்து 1,282 கனஅடி தண்ணீர் உபரியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
  • இந்த ஆண்டில் 5-வது முறையாக அமராவதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

உடுமலை:

மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்தநிலையில் புயல் கரையை கடந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த ஆறுகள் மூலம் நீர் பெறுகிற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளின் நீராதாரங்களாக கொண்டு அமராவதி அணை உள்ளது.

90 அடிக்கு நீர் தேங்கும் வகையில் 4.04 டி.எம்.சி., கொள்ளளவுள்ள இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மூலம் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

மாண்டஸ் புயல் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளான வால்பாறை, கொடைக்கானல், மறையூர், மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நீர்வரத்தை நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் கண்காணித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு அணைக்கு திடீரென 1000 கனஅடியை கடந்து நீர்வரத்து இருந்தது. இதனையடுத்து அணையில் ஏற்கனவே 89.5 அடிக்கு நீர்தேக்கப்பட்டு உள்ளதால் பாதுகாப்பு கருதி வரத்து நீர் முழுவதும் அமராவதி ஆற்றில் உபரியாக திறந்து விடப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 89 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,191 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,282 கனஅடி தண்ணீர் உபரியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

அணையின் மொத்த கொள்ளளவான 4.04 டி.எம்.சி.யில் தற்போது 3.99 டி.எம்.சி.க்கு நீர் இருப்பு உள்ளது. அணை முழு கொள்ளளவில் தற்போது உள்ளது.

அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் வரும் நீர் முழுமையாக உபரியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த ஆண்டில் 5-வது முறையாக அமராவதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News