தமிழ்நாடு

50 ஆண்டுகளுக்கு பிறகு குன்னூரில் வரலாறு காணாத அடர் பனிமூட்டம்- கடும் குளிரால் பொதுமக்கள் அவதி

Published On 2023-12-12 06:23 GMT   |   Update On 2023-12-12 06:23 GMT
  • குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
  • ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

அருவங்காடு:

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி தொடக்கம் வரை வெளுத்து வாங்குவது வழக்கம். அதன்படி அங்கு தற்போது கனமழை பெய்து வருகிறது.

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன.

இதுதவிர மலைப்பாதையின் பல்வேறு பகுதிகளில் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மேக கூட்டங்கள் தரைக்கு மிகவும் அருகே தவழ்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

அதிலும் குறிப்பாக குன்னூர் பகுதியில் பகல் நேரங்களில் கூட மேகமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. எனவே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை மெதுவாக இயக்கி வருகின்றனர். இதனால் குன்னூர் மலைப்பாதையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

குன்னூர் பகுதியில் நேற்று முதல் மழைச்சாரலுடன் மேகமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.

இதுதொடர்பாக குன்னூர் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

குன்னூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அடர்பனிமூட்டம் ஏற்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் வரலாறு காணாத அளவில் அதிகப்படியாக பனிமூட்டத்தை பார்க்க முடிகிறது. மேலும் அங்கு காலநிலை மாற்றமும் ஏற்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் அங்கு ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. எனவே நாங்கள் அச்சத்துடன் வாகனங்களில் பயணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குன்னூரில் இன்று காலை 10 மணியை கடந்த பின்னரும் அடர் பனி மூட்டம் காணப்பட்து. இதனால் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. பொதுமக்கள் குளிரை தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். குன்னூருக்கு வந்த சுற்றுலாபயணிகள் வெளியே செல்ல முடியாமல் ஓட்டல்களிலேயே முடங்கிப் போய் உள்ளனர்.

Tags:    

Similar News