தமிழ்நாடு செய்திகள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை- 5 சுவைகளில் கேக் தயாரித்து விற்பனை செய்ய ஆவின் திட்டம்

Published On 2022-12-07 12:28 IST   |   Update On 2022-12-07 13:02:00 IST
  • கேக்கினை பதப்படுத்தக்கூடிய குளிர்சாதன வசதி உள்ள பார்லர்களில் மட்டும் தான் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை செய்யப்பட உள்ளது.
  • பொங்கலுக்கு 100 கிராம் நெய் பாக்கெட் 50 லட்சம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக அரசின் நிறுவனமான ஆவின் மூலம் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக்கு பல்வேறு விதமான இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்யும் ஆவின் நிறுவனம் இந்த முறை கேக் தயாரிப்பிலும் ஈடுபடுகிறது.

சென்னையில் மட்டும் கிறிஸ்துமஸ் கேக் மற்றும் பிளம் கேக் விற்பனை செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டு உள்ளது. 5 சுவைகளில் கேக் தயாரிக்கவும், தனியார் கேக்கை விட குறைந்த விலையில் விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேக் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. சென்னையில் உள்ள முக்கிய ஆவின் பார்லர்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

கேக்கினை பதப்படுத்தக்கூடிய குளிர்சாதன வசதி உள்ள பார்லர்களில் மட்டும் தான் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா கூறியதாவது:-

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி ஆவின் சார்பில் 5 சுவைகளில் கேக் தயாரிக்கப்பட உள்ளது. இது தவிர பிளம் கேக்கும் தயாரிக்கப்படும். மற்ற நிறுவனங்களை விட தரத்துடன் விலை குறைவாக விற்கப்படும்.

பொங்கலுக்கு 100 கிராம் நெய் பாக்கெட் 50 லட்சம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏழை-எளிய மக்கள் பொங்கலை கொண்டாட நெய்யை பயன்படுத்தும் விதமாக அதிகளவில் தயாரிக்கப்பட உள்ளது. தற்போது 100 கிராம் நெய் 10 ஆயிரம் தான் தயாரிக்கப்படுகிறது.

சேலத்தில் புதிய ஐஸ்கிரீம் பண்ணை நிறுவப்பட்டு உள்ளது. அதன் மூலம் தினமும் 6000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News