தமிழ்நாடு

தேயிலை தோட்டத்தில் புகுந்து பலாப்பழங்களை ருசித்த ஒற்றை யானை

Published On 2024-03-14 06:14 GMT   |   Update On 2024-03-14 06:14 GMT
  • பலாப்பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களுக்கு திரண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
  • தொடர்ந்து பலா மரத்தின் மேல் கால் போட்டு ஏறி நின்றுகொண்ட யானை, மீண்டும் துதிக்கையை உயர்த்தி மரத்தின் உச்சியில் விளைந்து தொங்கிய பலாப்பழங்களை பறித்தது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் ஊடுபயிராக பலாப்பழ மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன. அங்கு தற்போது பலாப்பழ சீசன் என்பதால் அங்குள்ள மரங்களில் பழங்கள் காய்ந்து தொங்குகின்றன. இதனால் பலாப்பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களுக்கு திரண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் ஒரு காட்டு யானை நேற்று கூடலூர் ஓவேலி பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள தேயிலை-காப்பி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு விளைந்து நிற்கும் பலாமரங்களை நோட்டம் பார்த்தது. அப்போது ஒரு மரத்தின் உச்சியில் மட்டும் காய்கள் பழுத்து தொங்குவது தெரியவந்தது. தொடர்ந்து பலாமரத்தின்கீழ் நின்றபடி தும்பிக்கை மூலம் பலாப்பழங்களை பறிக்க முயன்றது. ஆனாலும் மரத்தின் உச்சியில் பழங்கள் இருந்ததால் யானைக்கு எட்டவில்லை. தொடர்ந்து பலா மரத்தின் மேல் கால் போட்டு ஏறி நின்றுகொண்ட யானை, மீண்டும் துதிக்கையை உயர்த்தி மரத்தின் உச்சியில் விளைந்து தொங்கிய பலாப்பழங்களை பறித்தது. பின்னர் அந்த பழங்களை தரையில் போட்டு நாசூக்காக மிதித்தது. இதில் அந்த பழங்கள் பிளந்து, சுளைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. தொடர்ந்து பலாக்காய்களை லாவகமாக தூக்கி நிறுத்தி, இரண்டாக பிளந்த காட்டு யானை, அவற்றில் இருந்த பழச்சுளைகளை ஆசைதீர ருசித்து தின்றது. பின்னர் மீண்டும் அடர்ந்த காட்டுக்குள் சென்றுவிட்டது.

இந்த காட்சியை, அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்தார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

Tags:    

Similar News