தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை பொதுமக்கள் பீதி- வனத்துறையினர் தீவிரம்
- வனத்துறையினர் பட்டாசு வெடித்து, அடர்ந்த காட்டிற்குள் யானைகளை விரட்டி வருகின்றனர்.
- யானை சாலைக்கு வந்து முகாமிட்டிருந்ததை சிலர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், 10-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. தினமும் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்து தக்காளி, பீன்ஸ், வாழை, கோஸ், மற்றும் நர்சரி பயிர்களை சேதம் செய்வது வாடிக்கையாக உள்ளது.
வனத்துறையினர் பட்டாசு வெடித்து, அடர்ந்த காட்டிற்குள் யானைகளை விரட்டி வருகின்றனர். ஆனால், பல பிரிவுகளாக பிரிந்துள்ள யானைகள், தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில், ஒற்றை யானை ஒன்று மரகட்டா வனப்பகுதியிலிருந்து, உணவு தேடி வெளியேறியது. காட்டில் இருந்து சாலைக்கு வந்த அந்த யானை, மேடான வளைவு பகுதியில் சுற்றித்திரிந்தது.
அதனை கண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனே, வாகனத்தை திருப்பிக் கொண்டு வந்த வழியாக திரும்பிச் சென்றனர். நீண்ட நேரமாக அங்கேயே முகாமிட்டிருந்த ஒற்றை யானை, சாலையை கடந்து நொகனூர் வனப்பகுதிக்குள் சென்றது.
யானை சாலைக்கு வந்து முகாமிட்டிருந்ததை சிலர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சி வைரலாகி வருகிறது.
தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.