வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட நிலையில் மீண்டும் சானமாவு பகுதியில் முகாமிட்ட யானைகள் கூட்டம்
- பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து, 200-க்கும் மேற்பட்ட யானைகள் உணவு தேடி வருவது வழக்கம்.
- யானைகளை விரட்ட பட்டாசு வெடித்தும், மேளம் எழுப்பி யானைகளை விரட்ட முயன்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு காவிரி தெற்கு என இரு வன உயிரின சரணாலயங்கள் உள்ளது.
இந்த வன உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து, 200-க்கும் மேற்பட்ட யானைகள் உணவு தேடி வருவது வழக்கம்.
இந்த ஆண்டு யானைகள் அதன் வலசை சீசனுக்கு முன்னரே கடந்த மாதம் முதல் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து 50-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை வழி யாக ஓசூர் அடுத்த சான மாவு வனப்பகுதியில் முகாமிட்டன.
இந்த தகவல் அறிந்த வனத்துறையினர், யானைகளின் நடமாட்டம் குறித்து சானமாவு, சினிகிரிபள்ளி கொம்மேபள்ளி, பீர்ஜேப் பள்ளி, ராமாபுரம், ஆழியாளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் காலை நேரங்களில் கிராம மக்கள் வயல்வெளிகள் மற்றும் மற்ற பணிகளில் ஈடுபட்டிருந்ததால் நேற்று மாலை யானைகளை விரட்ட பட்டாசு வெடித்தும், மேளம் எழுப்பி யானைகளை விரட்ட முயன்றனர்.
ஆனால், சினிகிரிபள்ளி வரை சென்ற யானைகள் மீண்டும் சானமாவு பகுதிக்கே வந்ததால் வனத் துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே, இன்று மாலை மீண்டும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.