தமிழ்நாடு செய்திகள்

கொள்ளை நடந்த வீட்டிற்கு மோப்பநாயினை போலீசார் அழைத்து வந்த போது எடுத்தபடம்.

கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை- போலீசார் விசாரணை

Published On 2023-10-29 15:38 IST   |   Update On 2023-10-29 15:38:00 IST
  • பீரோ உடைத்து, ரகசிய அறையில் இருந்த 60 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.4 லட்சம் பணம் கொள்ளைபோயிருந்தது.
  • கைரேகை நிபுணர்கள் வீட்டின் மதில்சுவர், கதவு, பீரோ போன்றவற்றில் இருந்த தடயங்களையும், கைரேகைளையும் சேகரித்தனர்.

பண்ருட்டி:

பண்ருட்டி அருள்ஜோதி நகரில் உள்ள பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவில் எதிரில் வசிப்பவர் முருகன் (வயது 55). இவர் பண்ருட்டி கூட்டுறவு வங்கியில் பணி செய்து வருகிறார். இவரது மனைவி சுலோச்சனா (47). இவர் செவிலியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார்.

இவர்களது மகன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். அவரை காண முருகன், சுலோச்சனா தம்பதியினர் வீட்டினை பூட்டிவிட்டு கடந்த 21-ந் தேதி கோயம்புத்தூருக்கு சென்றனர். நேற்று நள்ளிரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் மதில் சுவர் கேட்டை திறந்து போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பதட்டத்துடன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. பீரோ உடைத்து, ரகசிய அறையில் இருந்த 60 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.4 லட்சம் பணம் கொள்ளைபோயிருந்தது.

இது குறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கடலூரில் இருந்து மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். வீட்டிற்குள் வலம் வந்த மோப்ப நாய், வெளியில் வந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் ஓடியது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

தொடர்ந்து அங்கு வந்த கைரேகை நிபுணர்கள் வீட்டின் மதில்சுவர், கதவு, பீரோ போன்றவற்றில் இருந்த தடயங்களையும், கைரேகைளையும் சேகரித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை பண்ருட்டி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் சந்தேகப்படும்படியான நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், விசாரணைக்கு பின் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்படுமென போலீசார் கூறினார்கள்.

கூட்டறவு வங்கி ஊழியர் வீட்டில் தங்க நகை, வெள்ளி பொருட்கள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பையும், பொதுமக்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News