தமிழ்நாடு செய்திகள்

குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சங்கீதாவிடம் கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.

முறைகேடு புகாரில் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 6 பேர் ராஜினாமா- கலெக்டரிடம் பரபரப்பு கடிதம்

Published On 2023-07-03 13:32 IST   |   Update On 2023-07-03 13:32:00 IST
  • செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சியில் நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறவில்லை.
  • 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது.

மதுரை:

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கலெக்டர் சங்கீதாவிடம் கொடுத்தனர்.

மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தனம், ஜெயலட்சுமி, ஜெயக்கொடி, பஞ்சு, தங்கசாமி, பாண்டியராஜன் ஆகியோர் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சங்கீதாவை சந்தித்து தாங்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவிலாங் குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் கலெக்டர் விளக்கம் கேட்டார். அவர்கள் ஊராட்சியில் வெளிப்படை தன்மை இல்லை எனக்கூறி ராஜினாமா செய்வதாக தெரிவித்தனர்.

ராஜினாமா கடிதம் கொடுத்த பின்பு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நிருபர்களிடம் கூறியதா வது:-

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சியில் நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து கேட்டால் உரிய பதில் இல்லை. வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார்கள். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனை கண்டித்து நாங்கள் ராஜினாமா கடிதத்தை கலெக்டரிடம் கொடுத்துள்ளோம். அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News