தமிழ்நாடு

30 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டு மீட்கப்பட உள்ள சிலைகளை காணலாம்.

30 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட 6 சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Published On 2022-08-25 03:52 GMT   |   Update On 2022-08-25 03:52 GMT
  • சிலைகளை மீட்டு தரக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் கடந்த 2018-ம் ஆண்டு மனு அளித்தார்.
  • கும்பகோணம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் மாயமான சாமி சிலைகளில் 2 சிலைகள் அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

சென்னை:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள திரிபுராந்தகம், திரிபுரசுந்தரி மற்றும் நாரீஸ்வரர் கோவிலில் இருந்த நடராஜர், வீணாதாரி தட்சிணா மூர்த்தி, துறவி சுந்தரர்-பரவை நாச்சியாருடன் உள்ள சிலை, திரிபுராந்தகம் மற்றும் திரிபுரசுந்தரி உள்ளிட்ட 6 பஞ்சலோக சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்டது. இந்த சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்புடையவை.

இந்த சிலைகளை மீட்டு தரக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் கடந்த 2018-ம் ஆண்டு மனு அளித்தார். அதன்பேரில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. முத்துராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

திருடப்பட்ட சிலைகள் குறித்த ஆவணங்கள் இல்லாததால் உள்நாட்டு, வெளிநாட்டு கலைப்பொருட்கள் சேகரிப்பாளர்கள், பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் ஏல நிறுவனங்களில் இந்த சிலைகளின் படங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சேகரித்தனர். அதனை தடய அறிவியல் துறை மூலம் ஒப்பிட்டு சரிபார்த்தனர்.

இதில் வீர சோழபுரம் கிராமத்தில் உள்ள நாரீஸ்வர சிவன் கோவிலில் இருந்து திருடப்பட்ட 6 சிலைகளும் அமெரிக்காவின் பல்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் புலன் விசாரணை மூலம் கண்டுபிடித்து உள்ளனர்.

இதையடுத்து 'யுனெஸ்கோ' ஒப்பந்தத்தின் கீழ் இந்த சிலைகளை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

கும்பகோணம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் மாயமான சாமி சிலைகளில் 2 சிலைகள் அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சமீபத்தில் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News