கொள்ளை நடந்த அரசு டாக்டர் வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.
பழனி டாக்டர் வீட்டில் பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை
- 40 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
- சம்பவம் குறித்து அறிந்ததும் டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி இட்டேரி சாலை பகுதியை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது37). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி கவுசல்யா. இவரும் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றார். பின்னர் ஊர் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் 40 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. சம்பவம் குறித்து அறிந்ததும் டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி பகுதியில் தனியாக இருக்கும் வீடுகள், நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. போலீசாரின் தீவிர கண்காணிப்பால் குற்ற சம்பவங்கள் குறைந்தன. தற்போது மீண்டும் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டத் தொடங்கி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் உதயகுமாரை தாக்கி கட்டிப்போட்டு அவரது வீட்டில் கொள்ளையடிக்க ப்பட்டது.
இந்த நிலையில் மற்றொரு டாக்டர் வீட்டில் கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2 சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்குமோ? என சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.