தமிழ்நாடு செய்திகள்

துபாய், கம்போடியா நாடுகளில் இருந்து சென்னை வந்த 4 பேருக்கு கொரோனா

Published On 2022-12-29 08:33 IST   |   Update On 2022-12-29 08:33:00 IST
  • துபாயில் இருந்து சென்னை வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த மேலும் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
  • ஆந்திர வாலிபர் குறித்து ஆந்திர மாநில அரசுக்கு தகவல் தரப்பட்டு, அவரை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை:

சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ரேண்டம் அடிப்படையில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 24-ந் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தில் வரும் அனைத்து பயணிகளுக்கும் வெப்ப பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 2 சதவீத ரேண்டம் அடிப்படையில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான், தென்கொரியா போன்ற 5 நாடுகளில் இருந்து நேரிடையாக வந்தாலும் அல்லது வேறொரு நாட்டின் மூலமாக வந்தாலும் அவர்களுக்கு பரிசோதனை செய்து, அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் துபாய், கம்போடியா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த வாலிபருக்கும், பல்லாவரத்தை சேர்ந்த வாலிபருக்கும் நடத்திய சோதனையில் கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.

இதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த மேலும் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

இவர்களில் பல்லாவரத்தைச் சேர்ந்த வாலிபரை, பல்லாவரத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டதுடன், சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆலங்குடியை சேர்ந்தவர்களையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திர வாலிபர் குறித்து ஆந்திர மாநில அரசுக்கு தகவல் தரப்பட்டு, அவரை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இவர்கள் 4 பேருக்கும் எந்த வகையான கொரோனா பாதிப்பு? என்பதை அறிந்து கொள்ள 4 பேரின் ரத்த மாதிரிகளும் மரபணு சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. அதன்பிறகு இவர்களுக்கு புதிய வகை கொரோனா பாதிப்பா? என்பது தெரியவரும்.

விமானத்தில் இவர்கள் 4 பேருடன் அமர்ந்து வந்த பயணிகள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News