தமிழ்நாடு

சென்னையில் 2 எம்.பி.க்களை முடிவு செய்யும் 4 லட்சம் மீனவ நண்பர்கள்

Published On 2024-04-16 09:09 GMT   |   Update On 2024-04-16 09:09 GMT
  • வடசென்னையில் சுமார் 17 லட்சம் வாக்காளர்கள் உள்ளார்கள்.
  • தென்சென்னையை பொறுத்தவரை நொச்சிக்குப்பம் முதல் கோல்டன் பீச்சை தாண்டி பனையூர் வரை சுமார் 50 மீனவ கிராமங்கள் உள்ளன.

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சென்னையில் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய 3 எம்.பி. தொகுதிகள் உள்ளன.

மும்முனை போட்டி நிலவும் 3 தொகுதிகளிலும் வேட்பாளர்கள், கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், மத்திய மந்திரிகள் சுற்றி சுழன்றார்கள்.

சென்னையை பொறுத்தவரை பல தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து வாழ்கிறார்கள். ஒவ்வொரு தரப்பினரையும் கவரும் வகையில் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதில் வடசென்னை மற்றும் தென்சென்னை ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதாக இருப்பது மீனவ நண்பர்கள்.

வடசென்னையில் சுமார் 17 லட்சம் வாக்காளர்கள் உள்ளார்கள். இதில் எண்ணூர் முகத்துவார குப்பம் முதல் ராயபுரம் பனைமர தொட்டி வரை 43 மீனவர் கிராமங்கள் உள்ளன.

ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர் தொகுதிகளில் இடம் பெற்றுள்ள இந்த கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றன. சுமார் 1½ லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

தென்சென்னையை பொறுத்தவரை நொச்சிக்குப்பம் முதல் கோல்டன் பீச்சை தாண்டி பனையூர் வரை சுமார் 50 மீனவ கிராமங்கள் உள்ளன.

மிகப்பெரிய தொகுதியான தென்சென்னையில் 20 லட்சம் வாக்காளர்கள் உள்ளார்கள். அவர்களில் 2½ லட்சம் பேர் மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, இந்த 2 தொகுதிகளிலும் வெற்றியோ, தோல்வியோ அதை நிர்ணயிப்பவர்களாக மீனவ நண்பர்கள் இருக்கிறார்கள்.

இதனால் அவர்களின் ஆதரவை பெறுவதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கூட்டணிகளும் முட்டி மோதுகின்றன. வடசென்னையில் பா. ஜனதா செயலாளர் மீன்பிடி துறைமுக மேலாண்மை குழு உறுப்பினர் சதீஷ்குமார் தலைமையில் 85 பேர் கொண்ட குழு அமைத்து மீனவர் கிராமங்களில் முகாமிட்டு ஆதரவு திரட்டுகிறார்கள். மத்திய மந்திரிகள் பர்சாத்தம் ரூபேலா, வி.கே.சிங் ஆகியோரும் மீனவர் கிராமங்களில் முகாமிட்டு ஆதரவு திரட்டினார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க. தரப்பிலும் தனித்தனி குழுக்கள் இந்த மீனவர் கிராமங்களில் சுற்றி சுழல்கின்றன.

இதேபோல் தென் சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை மீனவர் கிராமங்களில் முகாமிட்டு ஆதரவு திரட்டுகிறார். கவர்னராக இருந்தபோது டி.வி.க்களில் பார்த்ததை நினைவுபடுத்தி பெண்கள் ஆர்வமுடன் உரையாடுகிறார்கள். 

ஏற்கனவே இந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்த டாக்டர் ஜெயவர்தன் (அ.தி.மு.க.), தற்போதைய எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன் (தி.மு.க.) ஆகியோரும் மீனவர்களின் வாக்குகளை அள்ளுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

மீனவர்கள் ஆதரவு யாருக்கு அதிகமாகிறதோ அவர்கள் எளிதில் வெற்றி கோட்டை தொடுவார்கள்.

Tags:    

Similar News