தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றிய 3 சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Published On 2023-11-16 04:36 GMT   |   Update On 2023-11-16 04:36 GMT
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள சுமார் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
  • உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ள கவுரி, ராஜேந்திரன் மற்றும் ராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கே.கே. நகர்:

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் குறிப்பாக பல்வேறு புதிய முறைகளில் தங்கத்தை கடத்தி வரும் பயணிகளிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்துவதில் திருச்சி சுங்கத்துறையில் பணியாற்றி வரும் டிரைவர் ஒருவர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. அவர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள சுமார் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றி வரும் 3 சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி விமான நிலைய சுங்கத்துறையில் பணியாற்றி வந்த துணை கமிஷனர்கள் இளமதி மற்றும் ராம்குமார், உதவி கமிஷனர் ஆக பணியாற்றி வந்த சிவகுமார் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு பதிலாக உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ள கவுரி, ராஜேந்திரன் மற்றும் ராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் தங்க கடத்தலை தடுக்கும் வகையில் மேலும் பல்வேறு அதிகாரிகள் மாற்றப்படும் நிலை உள்ளதாக தெரிய வருகிறது.

Tags:    

Similar News