தமிழ்நாடு செய்திகள்

கொலையான அருண்குமார்.

கூடலூரில் தேங்காய் வெட்டும் தொழிலாளி படுகொலை: 3 பேர் கைது

Published On 2023-09-30 10:42 IST   |   Update On 2023-09-30 10:42:00 IST
  • உத்தமபாளையத்தை சேர்ந்த அஜித்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
  • குடிபோதையில் இருந்த கீர்த்தி மற்றும் அருண்குமாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.

கூடலூர்:

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் 2-வது வார்டை சேர்ந்த பால்பாண்டி மகன் அருண்குமார் (வயது23). இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார்.

கடந்த பல மாதங்களாக கருநாக்கமுத்தன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த கீர்த்தி (25) என்பவருடன் மட்டுமே வேலைக்கு சென்று வந்தார். ஆனால் தற்போது அவரை விடுத்து வேறு நபருடன் வேலைக்கு சென்றார். இதனால் கீர்த்திக்கும், அருண்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் உத்தமபாளையத்தை சேர்ந்த அஜித்குமார் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்புக்கு அருண்குமார் மற்றும் கீர்த்தி தரப்பினர் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் மீண்டும் தகராறு வெடித்தது.

இதனால் அருண்குமாரை தீர்த்து கட்ட கீர்த்தி முடிவு செய்தார். இதற்காக தனது நண்பர்களான கிரேன் (22), பாண்டியன் (24) ஆகியோரை அழைத்துக் கொண்டார். நேற்று இரவு அருண்குமாரை குள்ளப்பகவுண்டன்பட்டி ஈஸ்வரன் கோவில் அருகே அவர்கள் வரவழைத்தனர். குடிபோதையில் இருந்த கீர்த்தி மற்றும் அருண்குமாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.

இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து அருண்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அருண்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அருண்குமார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் 3 பேரை கைது செய்து அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News