தமிழ்நாடு
ஆலமரத்திற்குள் சிக்கிய ஆட்டோ

ஆலமரத்திற்குள் சிக்கிய ஆட்டோ... ஆச்சர்யத்துடன் பார்க்கும் பொதுமக்கள்!

Published On 2022-05-27 04:19 GMT   |   Update On 2022-05-27 04:19 GMT
ஆலமரம், ஆட்டோவை கபளிகரம் செய்து விழுங்குவது போல் காட்சி அளிப்பதால் அங்கு வரும் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர பகுதிக்கு உட்பட்ட ராயபுரம் பகுதியில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான பழமையான மரங்கள் உள்ளன. மேலும் சிறுவர்கள் விளையாட்டு பொருட்களும், நடைபயிற்சி செல்லும் வகையில் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் 30 ஆண்டு கடந்த ஆலமரமும், வேம்பு,புங்கன் உள்ளிட்ட மரங்களும் உள்ளன.

இந்நிலையில் பூங்காவின் மையப்பகுதியில் உள்ள ஆலமரத்தில் பின்னி பிணைந்து புதைந்த நிலையில் பயணிகள் ஆட்டோ ஒன்றின் முன்பகுதி சிதைவுகளுடன் உள்ளது. இதனை திடீரென பார்க்கும் போது ஆலமரத்தில் ஆட்டோ ஒன்று சிக்கிக்கொண்டு வெளியே வர முயற்சிப்பது போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

ஆட்டோவின் முன் பகுதி மரத்தின் கிளைப் பகுதியிலும், டயர் மரத்தின் மைய தண்டுப்பகுதியில் பதிந்த நிலையில் உள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ஆலமரம் சிறிதாக இருந்தபோது, அதன் அருகே கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஆட்டோ ஒன்று மரம் பெரிதாக வளரும் போது மரத்தின் மையத் தண்டுப்பகுதியில் சிக்கி கொண்டது. மரம் வளர வளர ஆட்டோவின் பாகங்களும் மரத்தில் புதைந்து அதில் இருந்து பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மரம் வளர வளர தற்போது அந்த ஆட்டோவின் பாகங்களும் ஒவ்வொரு பகுதியாக இடம் மாறி வருகிறது. தற்போது அகற்றினால் ஆலமரம் பாதிக்கப்படும் என்பதால் என்ன செய்வது என தெரியவில்லை என்றனர்.

ஆலமரம், ஆட்டோவை கபளிகரம் செய்து விழுங்குவது போல் காட்சி அளிப்பதால் அங்கு வரும் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர்.
Tags:    

Similar News