தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு

நத்தம் அருகே அய்யாபட்டி ஜல்லிகட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

Update: 2022-05-20 05:28 GMT
திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி, சிவகங்கை, உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் ஜல்லிகட்டில் கலந்து கொண்டனர்.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அய்யாபட்டியில் உள்ள காளியம்மன், கருப்புசாமி கோவில் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிகட்டு விழா நடந்தது.

போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார், தாசில்தார் சுகந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் வாடிவாசலிலிருந்து ஊர் சுவாமி மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது.

அதன் பின்னர் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக போட்டிக்கான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை சீருடை அணிந்து வந்த மாடு பிடி வீரர்கள் போட்டிபோட்டு மடக்கி பிடித்தனர்.

பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும், முரட்டு காளைகளை மடக்கி பிடித்த வீரர்களுக்கும், தங்கம், வெள்ளி, பர்னிச்சர் பொருட்கள், சில்வர், பித்தளை பாத்திரங்கள், கட்டில், பீரோ, வேஷ்டி துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மாடுபிடி வீரர்களுக்காக மைதானத்தில் தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன.

மேலும் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாடி வாசல் முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி, சிவகங்கை, உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் ஜல்லிகட்டில் கலந்து கொண்டனர். சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்த விழாவில் மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கண்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். காளைகள் கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்கு பிறகே வாடிவாசலுக்கு அனுமதிக்கப்பட்டது.

இதே போல் மாடுபிடி வீரர்களுக்கு அரசு மருத்துவ குழுவினர்களால் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே மைதானத்தில் இறங்கி மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிகட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யாபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மாவட்ட இணைகாவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News